ஈபிஎஸ் டீம் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஓபிஎஸ் டீம் சைலன்ட் மோடிலேயே உள்ளது.

அதிமுக ஒரே கட்சியாக அறியப்பட்டாலும் தற்போதும் கூட ஈபிஎஸ் – ஓபிஎஸ் டீம்கள் என்கிற நிலையில் தான் நிர்வாகிகள் நியமனம் தொடங்கி கட்சி நிகழ்ச்சிகள் வரை நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு டீம்களில் எந்த டீம் பலமானது என்று நிரூபிக்க பனிப்போரும் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதன் மூலம் சட்டப்பேரவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்கொள்ளப்போவது யார் என்பதை நிரூபித்து வருகிறார். ஆனால் தேர்தல் பணிகளை பொறுத்தவரை ஓபிஎஸ் டீம் இன்னும் தனது பணிகளை தொடங்கவே இல்லை.

அதிமுகவிற்கு என்று தனியாக ஐடி விங்க் இருக்கிறது. அதே சமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கென்று தனியாக ஐடி விங்கை நடத்தி வருகிறது. அதனை இதுநாள் வரை அவரது மகன் மேற்பார்வை செய்து வந்தார். தற்போது சுனில் எனும் வியூக வகுப்பாளர் வந்த பிறகு சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய புரமோசனல் செய்திகள் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. இதே போல் தமிழக அரசின் திட்டங்கள் அவர்கள் செயல்படுத்தும் விதங்கள் தொடர்புடையவையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரபலப்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மையமாக வைத்தே நடைபெறுகின்றன.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து  தனிப்பட்ட முறையில் வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு தனி அணி செயல்பட்டு வருகிறது. இதே போல் தமிழக அரசு மீதான விமர்சனங்களுக்க பதிலடி கொடுக்க ஒரு அணி, எதிர்கட்சிகளின் பலவீனங்களை அம்பலப்படுத்த ஒரு அணி, ட்ரோல்களை கவனிக்க ஒரு அணி, டிரெண்டிங்குகளை கவனிக்க ஒரு அணி என எடப்பாடி பழனிசாமி ஐடி விங்க் 24 மணி நேரமும் பம்பலமாக சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் திமுகவில் இருந்து வந்த வியூக வகுப்பாளர் சுனிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் டிஜிட்டல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் சென்றுவிடும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்த பணிகள் அனைத்தும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் காட்சி வடிவில் தயாராகி வருகிறது. இதே போல் எளிமையான முதலமைச்சர் என்கிற இமேஜை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஒரு கட்சிக்கான ஐடி விங்க் எப்படி செயல்படுமோ அதே பாணியில் எடப்பாடி பழனிசாமிக்கு என்று மட்டும் பிரத்யேகமாக சுனில் மற்றும் டீம் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் மகன் இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். மறுபக்கம் அதிமுகவின் ஐடி விங்கும் தனது பங்கிற்கு சமூக வலைதள பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னரே தனக்கான ஐடி விங்கை உருவாக்கிய ஓபிஎஸ் டீம் டெட் சைலன்டில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு டிஜிட்டல் வடிவ பிரச்சாரம் என்கிற வரை இறங்கியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்போ தேர்தல் அறிவிப்பு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் உள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் கட்சி, ஆட்சி எனும் இரண்டிலுமே பெரிய அளவில் ஈடுபாடு இல்லாதவர் போல் ஓபிஎஸ் நடந்து கொள்வதாகவும் அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்த ஓபிஎஸ் மூத்த மகனும் தேனி எம்பியும் ரவீந்திரநாத்தும் கூட தற்போது அமைதி காத்து வருகிறார். அதே நேரம் இளைய மகன் ஜெயபிரதீப் மட்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்க கூடிய ஓபிஎஸ் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமைதி காப்பது அக்கட்சியினர் மத்தியில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இந்த இருக்கத்தை போக்க ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.