செய்தியாளர் சந்திப்பின் போது அதிமுகவில் சில எட்டப்பன்கள் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் உளறிக் கொட்டியது தான் தற்போது ஹாட் டாபிக்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய காரை சம்பங்கி எப்படி கொடுத்தார் என்பது தான் அதிமுக மேலிடத்தின் தற்போதைய பெருங்கவலை. அதே சமயம் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் செல்லாதது அதிமுகவிற்கு நிம்மதியை அளித்துள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள் என ஏராளமானோரை தினகரன் தரப்பு தொடர்பு கொண்டு பேசியது. ஏராளமானவர்கள் சசிகலாவை வரவேற்க வருவதாகவும் வாக்கு கொடுத்தனர்.

ஆனால் ஒரே ஒரு ஒன்றியச் செயலாளர் மட்டுமே சசிகலாவை வரவேற்கச் சென்றவர்களில் அதிமுகவில் சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இருப்பவர்கள். மற்ற அனைவருமே முன்னாள் நிர்வாகிகள். மேலும் அதிமுகவில் பதவி பறிக்கப்பட்டவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் மோதலில் உள்ளவர்கள் தான் சசிகலா வரவேற்பிற்கு சென்றுள்ளனர். இதனால் மிகப்பெரிய தர்மசங்கடத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்பியுள்ளார் என்றே கூறலாம். பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் சுமார் 120 எம்ஏல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசை அமைத்துவிட்டு சென்றவர் சசிகலா.

சிறைக்கு செல்லும் போதும் இதே போல் சென்னை முதல் பெங்களூர் வரை அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்களை வரிசை கட்டி சசிகலாவை அனுப்பி வைத்தனர். ஆனால் அதே சசிகலா விடுதலையாகி திரும்பும் போது முக்கிய பிரபலங்கள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. அதே சமயம் சசிகலா சென்னை வருவதற்கு அதிமுக பிரமுகர் சம்பங்கி என்பவர் கார் கொடுத்து உதவியுள்ளார். அவரை உடனடியாக அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இப்படி இதுவரை சுமார் 20 பேர் அதிமுகவில் இருந்து சசிகலாவுடன் தொடர்பு கொண்டதால் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலாவை வரவேற்க அதிமுகவினர் யாரும் செல்லவில்லை என்றார். அதே போல் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அதிமுகவில் சசிகலாவின் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனரா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அப்படி எல்லாம் யாரும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதிமுகவில் உள்ள சில எட்டப்பன்கள் சசிகலாவுக்கு உதவியுள்ளனர் என்று கூற பத்திரிகையாளர்கள் அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க ஆரம்பித்தனர்.

இதுநாள் வரை அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவாக யாருமே இல்லை என்று ஜெயக்குமார் கூறி வந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் அப்படியே சொல்லி வந்தனர். ஆனால் செய்தியாளர் சந்திப்பின் போது தன்னையும் மறந்து அதிமுகவில் சில எட்டப்பன்கள் உள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளது தினகரனின் ஸ்லீப்பர் செல் விவகாரத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.