மக்களவை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டணிக்காக அதிமுக, தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக முடிவு செய்துவிட்டது. தங்களுக்கு பலம் இருக்கும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க பாஜக, பாமகவும் தயாராக இல்லை. தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை அதிமுக ஒதுக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதிமுகவில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆகியோரும் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தென் சென்னையில் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தனும்  தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், கடலூரில் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனும், மதுரையில் ரா.செல்லப்பா மகன் ரா.சத்யனும், கரூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியும், திண்டுக்கல்லில் எடப்பாடி மகன் மிதுன்னும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தென் சென்னையில் போட்டியிட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், முதல்வரும், துணை முதல்வரும் கேட்டுக் கொண்டும், அந்தத் தொகுதியை தாரை வார்க்க ஜெயக்குமார் முன்வரவில்லை. இதையடுத்தே, தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

பாஜகவுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, வட சென்னை, நீலகிரி ஆகிய 5 தொகுதிகளை ஒதுக்குவதாக அ.தி.மு.க தெரிவித்ததாம். ஆனால், பாஜக, ஏற்க மறுத்து கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தென் சென்னை மற்றும் ராமநாதபுரம் அல்லது திருச்சி ஆகிய தொகுதிகளைக் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.