பாஜகவை தொடர்ந்து தாக்கி பேசிவரும் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்தத் தலைவருமான தம்பிதுரையின் பேச்சு நேற்று நாடாளுமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியது. 

திருப்பூரில் தன்னை புறக்கணித்ததற்காகவே நேற்றைய பேச்சில் தம்பிதுரை அனலைக் கக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி அமைய தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார் தம்பிதுரை. ரபேல் தொடங்கி, 10 சதவீத இடஒதுக்கீடு என எல்லா விவகாரங்களிலும் பாஜகவை குறைகூறி வந்த தம்பிதுரை, நேற்றைய  நாடாளுமன்றக் கூட்டத்தில் பாஜக அரசை முழுமையாக தாக்கிப் பேசினார். 

“மத்திய அரசு தேர்தலுக்காக மட்டும் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க நாடகம். இது தேர்தல் அறிக்கை போல இருக்கிறது. இதையே ஏன் சென்ற வருடம் பாஜக அறிவிக்கவில்லை” என்று உச்சக்கட்டமாக பேசிய பேச்சு பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு தம்பிதுரைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பேசவிடாமல் கூச்சல் இட்டனர். இதன் பின்னணி குறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. 

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாகத் தொடங்கிய பிறகு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் எதிலும் சேர்க்கப்படாமல் தம்பிதுரை தவிர்க்கப்பட்டார். இதனால் தம்பிதுரை சற்று அப்செட்டாகி இருந்தார். மதுரையில் நடந்த எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் தம்பிதுரைக்கு மேடையேறிய நிலையில், திருப்பூரில் நடந்த அரசு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து பாஜகவை விமர்சித்துவரும் தம்பிதுரையை மேடையேற்ற பாஜக விரும்பாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. 

திருப்பூரில் இடம் மறுக்கப்பட்டதால் கோபத்தில் இருந்த தம்பிதுரை, அந்தக் கோபத்தையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராகப் பேசி அக்கட்சியைக் கலங்கடித்துவிட்டார் என்கிறார்கள் அதிமுகவில் சிலர். எல்லாக் கட்சித் தலைவர்களும் கூடிய நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியதால், இந்த இரு கட்சிகளும் எப்படி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்ற சந்தேகத்தை தேசிய கட்சித் தலைவர்களின் மத்தியில் தம்பிதுரை விதைத்துவிட்டார் என்கிறார்கள் அதிமுகவினர். 

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தம்பிதுரையின் பேச்சுகள் இடையூராக இருப்பதாக தற்போது டெல்லி பாஜக தலைமையும் கோபம் கொள்ளத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எம்.ஜி.ஆர், காலம் தொடங்கி தேசிய அரசியலில் இருந்துவரும் தம்பிதுரையை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் அதிமுக தலைமையும் முழித்து வருகிறது.