அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் சில எம்பிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் நேற்று  சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவநீதகிருஷ்ணன் எம்பி  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.