அ.தி.மு.கவில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக அக்கட்சியின் எம்.பி., மைத்ரேயன் பேஸ்புக்கில் புலம்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பு குழுவை அ.தி.மு.க தலைமை அறிவித்தது. ஆனால் இந்த குழுவில் எதிலுமே மைத்ரேயன் இல்லை. அ.தி.மு.கவை உடைத்து ஓ.பி.எஸ் அணி உருவான போது முதல் ஆளாக சென்று சேர்ந்தவர் மைத்ரேயன். 

டெல்லியில் உள்ளவர்களுக்கும் ஓ.பி.எஸ்க்கும் இடையே ஒரு பாலமாகவே மைத்ரேயன் செயல்பட்டு வந்தார். ஆனால் அ.தி.மு.க ஒன்றாக சேர்ந்த பிறகு மைத்ரேயன் – ஓ.பி.எஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கு முதல் காரணம் ஒன்றாக இணைந்த போது மைத்ரேயனுக்கு எந்த பதவியும் ஓ.பி.எஸ் தரப்பால் பெற்றுத் தர முடியவில்லை. இதன் பின்னரும் கூட ஓ.பி.எஸ் ஆதரவாளராகவே மைத்ரேயன் செயல்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தலைமை அளவில் தான் அ.தி.மு.க ஒன்று இணைந்துள்ளது, தொண்டர்கள் இன்னும் இணையவில்லை என்று சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் மைத்ரேயன் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பு பின்னர் அடங்கியது. 

இந்த நிலையில் தான் அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டு குழுவிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் தனக்கு இடம் கொடுக்கப்படாதை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மைத்ரேயன். அதாவது கடந்த 2001 முதல் நடைபெற்ற தேர்தல்கள் பலவற்றில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஜெயலலிதா தன்னை சேர்த்திருந்ததாக மைத்ரேயன் குறைபட்டுக் கொண்டார். 

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மைத்ரேயனை அ.தி.மு.கவில் இருந்து ஜெயலலிதா ஓரம்கட்டினார். அவர் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பிக்கள் குழு தலைவர் பதவியையும் ஜெயலலிதா பறித்தார். இதற்கு காரணம் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பா.ஜ.கவுக்கு ஆதரவாக மைத்ரேயன் பேசிய சில பேச்சுகள் தான். அதன் பிறகு மைத்ரேயனை ஜெயலலிதா தனது பக்கத்தில் கூட அண்டவிடவில்லை.

 

இதே போல தற்போதும் ஓ.பி.எஸ் மைத்ரேயனை ஒதுக்கி வைக்க அவரது டெல்லி தொடர்புகள் தான் காரணம் என்கிறார்கள். ஓ.பி.எஸ் தரப்பின் நடவடிக்கைகள் சில டெல்லிக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுவதும் இதற்கு காரணம் மைத்ரேயன் தான் என சந்தேகித்ததும் தான் அவரை ஓ.பி.எஸ் ஒதுக்கியதற்கு காரணம் என்கிறார்கள். அதாவது அ.தி.மு.கவை விட பா.ஜ.க தலைவர்கள் சிலருக்கு மைத்ரேயன் விசுவாசமாக இருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது. எனவே தான் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளி மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்கிறார்கள் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்.