பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, அதிமுக எம்.பி. அருண்மொழிதேவன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதிமுக எம்.பியும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருண்மொழி தேவன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கடந்த 2.9.2018 இல் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இந்து கோயில்கள் மீட்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. 

இந்தப் போராட்டத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேசுகையில், திட்டக்குடி குளத்தை ஆக்கிரமிச்சது யாரு? சிட்டிங் எம்.பி அருண்மொழிதேவன். ஒரு எம்.பி-யாக இருக்கின்ற ஆள், அதுவும் சிட்டிங் எம்.பி, கோயில் நிலத்தை 200 ஏக்கர் அபகரிச்சு இருக்கார். எங்கிட்ட எல்லா டாக்குமென்ட்டுகளும் இருக்கு. கழகம் என்றாலே கலகம்தான். எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்று பேசியுள்ளார். 

நான் கோயிலுக்குச் சொந்தமான ஒரு சதுர அடி இடத்தைகூட அபகரிக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ இல்லை. 100 சதவிகிதம் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார். அவர் வேண்டுமென்றே என்னையும் அ.தி.மு.க-வையும் குறித்து அவதூறு பேச வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு பேசியுள்ளார். அவருடைய பேச்சு ஒரு ஃபேஸ்புக் பதிவில் இருப்பதை நேற்றுதான், நான் பார்த்து தெரிந்துகொண்டேன். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் அவருடை பேச்சு உள்ளதால் ஹெச்.ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அருண்மொழி தேவன் தெரிவித்துள்ளார்.

 

இதன் பிறகு, எம்.பி.அருண்மொழி தேவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு  எம்.பி.-யை அவன் இவன் என்று ஹெச் ராஜா ஏக வசனத்தில் பேசுகிறார். ஒரு வக்கில்லாத வகையில்லாத ராஜா, தமிழகத்தில் மத கலவத்தை ஏற்படுத்த முயன்றால், அதனை அதிமுக ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார். ஹெச்.ராஜா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்படும் என்றும், எம்.பி. அருண்மொழி தேவன் கூறினார்.

 

இந்த நிலையில், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, தமிழக போலீசார் மற்றும் நீதித்துறையை அவதூறாக ஹெச்.ராஜா பேசியிருந்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஹெச்.ராஜாவை கைது செய்ய முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அதிமுக எம்பிகள், அதற்கு நேர்மாறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதா? வேண்டாமா? என்ற குழப்பமான நிலை ஆளும் கட்சியில் நிலவுவது வெளிப்படையாக தெரிந்துள்ளது