அதிமுக கூட்டணியில் இணைய போக்கு காட்டி வரும் தேமுதிகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமுக எம்எல்ஏ சூலுர் கனகராஜ். 

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுப்பதால்தான், அதிமுக தரப்பு தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமே இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாளில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளிடம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியதை அனைவரும் விமர்சனம் செய்தனர். 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எங்களால்தான் 2011ல் அதிமுக வெற்றி பெற்றது, 37 எம்பிக்கள் இருந்தும் வேஸ்ட் என்று கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே கடுப்பேற்றியது. இந்த நிலையில், ''நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் பேசியதால்தான் தேமுதிக வீழ்ச்சியடைந்தது'' என்று அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார். 

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால், தேமுதிகவால் 500, 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும். தேமுதிக இரு கட்சிகளுடன் பேசியது மிகப்பெரிய தவறு. இங்கொன்றும் அங்கொன்றும் என தேமுதிக இருபக்கமும் பேசுகிறது. சட்டப்பேரவையில் நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் பேசியதால்தான் தேமுதிக வீழ்ச்சியடைந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.  

தேமுதிக வீழ்ச்சியடைந்துவிட்டதாக அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளது பிரேமலதாவுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. எனவே, அதிமுக-தேமுதிக கூட்டணி இழுபறி நீடித்துக்கொண்டுள்ளது.