நான்கு வார்த்தையை தெளிவாக பேச வக்கில்லாத திராணி இல்லாத எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டிருக்கும், நீ தன்னை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

 தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தலை நிறுத்த வேண்டும் சீற்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். முதல்வர் கனவில் உள்ள மு.க.ஸ்டாலின் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். 

இதனையடுத்து, முரசொலி செய்தி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் இந்த உருட்டல் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். இதை எல்லாம் பார்த்துவிட்டுதான் இந்த அரசியலுக்கு வந்துள்ளேன். மூன்றாம் தர பத்திரிக்கையான முரசொலி என்னை பற்றி எழுதுகிறது. ஊர் பெயர் தெரியாதன் என்று. நான் இந்த தமிழகத்தின் குடிமகன். நீ எங்கிருந்து வந்தாய், உன்னுடைய தலைவர் எங்கிருந்து வந்தார். அவர்களுடைய பூர்வீகம் என்ன என்று தைரியமாக சொல்ல முடியுமா? எதை பேச வேண்டுமானாலும் நாவடக்கத்துடன் பேசவேண்டும்.

மேலும், என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அப்படி தைரியம் இருந்தால் என்னுடைய பெயரை சொல்லி பேசுபார்க்கலாம் நான் சந்திக்க தயாரா இருக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.