4 தொகுதிகளுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் அமைச்சர்களின் தலையீடு அதிகம் இருப்பதால் முடிவெடுக்கம் முடியாமல்  திணறி வருகிறது அதிமுக தலைமை. 

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியைக் காப்பாற்ற இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக உள்ளன. 

இந்நிலையில் திமுக, டி.டி.வி.தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டு களத்தில் குதித்துள்ளனர். ஆனால் உட்கட்சி பூசலால் இன்னும் அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திணறிப் வருகிறது. மதுரையை பொறுத்தவரை, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் ஏழாம்பொருத்தமாக உள்ளது. இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பபா தனி ஆர்வத்தனம் காட்டி வருகிறார். தனது மகனுக்காக செல்லூர் ராஜூவிடம் சமரசம் செய்து கொண்டு ராஜ் சத்யனுக்கு எம்.பி சீட் வாங்கிக் கொடுத்ததால் திருபரங்குன்றம் வேட்பாளரை சிபாரிசு செய்யாமல் கமுக்கமாகி விட்டார் ராஜன் செல்லப்பா. 

செல்லூர் ராஜூ பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சீட் வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். ஆர்.பி.உதயகுமார், மறைந்த ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமியை களமிறக்க வேண்டும் எனத் துடிக்கிறார். அதேவேளை தனது தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கத்தை வேட்பாளராக்க துணை முதல்வர் விரும்புகிறார். இந்த முத்துராமலிங்கம் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்த சென்ற போது முதல் ஆளாக ஆதரவு தரச் சென்றார். அந்த விஸ்வாசத்தில் முத்துராமலிங்கத்தை வேட்பாளராக்க நினைக்கிறார். இந்த மூவருமே தங்களது ஆதரவாளருக்குத் தான் சீட் தரவேண்டும் என பிடிவாதம் காட்டுவதால் முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த ஒரு தொகுதியை தவிர மற்ற மூன்று தொகுதிகளில் கிட்டத்தட்ட வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது அதிமுக தலைமை. விரைவில் அறிவித்து வேட்பாளரை களமிறக்கி தேர்தல் பணிகளை முடுக்கி விடவேண்டும் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுப்பதில் அமைச்சர்கள் முண்டுதட்டி முட்டல் மோதலை ஏற்படுத்தி வருகின்றனர்.  இதனால் நொந்துபோன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘’நான் ஆட்சியை காப்பாத்தணும்னு நினைக்கிறேன். நீங்க ஆதரவாளர்களை காப்பாற்ற முட்டி மோதுறீங்க. ஆட்சி நீடிச்சா மட்டும் தான் நீங்க அமைச்சர். இல்லே உங்களையே காப்பாற்ற முடியாது’ என நொந்துபோய் சொல்லி இருக்கிறார்.