அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்  அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்  நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்யும் சிறப்பு முகாமைப் பார்வையிட்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, பாமக அடங்கிய அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.