தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கமா.? விடாப்பிடியாக இருக்கும் அதிமுக- நடக்கப்போவது என்ன.?
அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்கு தகுதியில்லையென அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக- பாஜக மோதல்
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது ஆனால் இரண்டு தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி இரண்டு கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில் கூட்டணி தொடருமா.? அல்லது தொடராதா? என்ற நிலையானது ஏற்பட்டு இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் டெல்லிக்கு பாஜக தலைமையால் அழைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசினார். அப்போது இருதரப்பிற்கும் சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
சமரசம் செய்த பாஜக மேலிடம்
தமிழகத்தில் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி கிடைக்கும் என்றும் பிரிந்து சென்றால் திமுகவிற்கு சாதமாக அமையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு தரப்பு தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிச் சென்றனர். இதனையடுத்து அதிமுக தலைவர்கள் பாஜகவில் விமர்சிக்காமல் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது பாஜகவினர் மட்டும் அதிமுகவின் செயல்பாடுகளை விமர்சித்தும் தாங்கள் தான் எதிர்க்கட்சி என்ற முழக்கத்தையும் அவ்வப்போது எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா சிறை சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை கூற தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலைக்கு எதிராக அதிமுக
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு படி மேலே சென்று அண்ணாமலைக்கு மாநில தலைவராக இருப்பதற்கு தகுதியே இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து மறுபரிசீலனைசெய்ய வேண்டிய நிலை வரும் எனவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான கருத்துகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரலாமா வேண்டாமா அல்லது நாடாளுமன்ற தேர்தல் வரை அமைதி காக்கலாமா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை நீக்கப்படுவாரா.?
அதே நேரத்தில் ஜெயக்குமாரை விமர்சித்து பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கூட்டணி தொடருவது கேள்வி குறியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழகம பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுக தரப்பில் வலுத்துள்ளது. எனவே டெல்லியில் உள்ள பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்