அதிமுக ஏற்றுக் கொள்ளாததால் விரக்தியின் உச்சியில் தங்க தமிழ்செல்வன் உளறுவதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்சியை 
இணைத்துக் கொள்ள தினகரன் தரப்பு தூது அனுப்பியதாகவும், அதனை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் டிடிவி ஈடுபடுவதாகவும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 

எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக, டிடிவி தினகரனை சந்தித்துப்பேச, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நேரம் கேட்டதாக, 
தங்க.தமிழ்ச்செல்வன் அண்மையில் வெளியிட்ட தகவலால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிடிவி  தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பு 2017 ஜூலை 12 ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் 
நடைபெற்றதாகவும் தங்க.தமிழ்செல்வன் கூறியிருந்தார். 

இதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இந்த நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், அதிமுக ஏற்றுக் கொள்ளாததால் விரக்தியின் உச்சியில்  தங்க.தமிழ்செல்வன் உளறுவதாக கூறியுள்ளார். ஒற்றுமையாக உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரிக்க டிடிவி தினகரன் சூழ்ச்சி செய்வதாக அமைச்சர் தங்கமணி கூறினார். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கட்சியை இணைத்துக் கொள்ளலாம் என டிடிவி தினகரன் எங்களுக்கு தூது அனுப்பினார். தினகரன் கட்சியை அதிமுகவுடன் இணைக்க தூது அனுப்பியது தொடர்பான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றும் அதனை வெளியிட தயார் என்றும் அவர் கூறினார்.