அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.  

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்பதுதான் தற்போதைய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  தண்டனைக் காலம் நிறைவடைய இன்னும் ஓராண்டுக்கும் மேல் இருக்கும் நிலையில், அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகின. அதேவேளையில் பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்தால் சசிகலா அதிமுகவில் இணைவாரா அல்லது அமமுகவில் சேருவாரா என்ற பட்டிமன்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;-  திருமணமான இளம்பெண்ணை ஆசை காட்டி பலாத்காரம் செய்த தம்பி... அரட்டி மிரட்டிய அண்ணன்..!

இதனிடையே, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதேபோல், நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓபிஸ் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என்றார். மேலும், அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்ததன் காரணமாக மக்கள் மாபெரும் வெற்றியை தந்துள்ளனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின் அள்ளிவிடும் போய்களை மக்கள் நம்பவில்லை. 

மேலும், அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை சசிகலா, தினகரனை தவிர யாரும் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று கூறியிருந்த அதிமுகவினர் தற்போது பொதுக்குழு முடிவு செய்யும் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம், இது குறித்து அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அதிமுகவில் ஒரு போதும் சேர மாட்டார் என்று பதில் அளித்துள்ளார்.