பொதுச்செயலாளராக அங்கீகரித்த டெல்லி..! உற்சாகத்தில் இபிஎஸ்..!என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்,இபிஎஸ் என பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அங்கீகரித்து ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு வந்தனர். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வெற்றிக்காக பாடுபடவில்லையென புகார் கூறப்பட்டது. மேலும் இரட்டை தலைமை என்ற முடிவால் கட்சி தொடர்பாக நடவடிக்கைகளில் கால தாமதம் ஆவதாகும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்க்கு அதிமுகவில் உள்ள 90 சதவிகித நிர்வாகிகள் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இபிஎஸ்க்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு
இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதிமுக யாருக்கு சொந்தம் என வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஜி.20 மாநாட்டு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல முக்கிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் பாராளுமன்ற விவாகரத்துறை சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார்? ஓபிஎஸ் அதிர்ச்சி..!
அதிர்ச்சியில் ஓபிஎஸ்
இந்தநிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அண்ணா தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார். இதனையடுத்து காலை 11.30 மணி அளவில் விமானத்தில் டெல்லி செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி.20 மாநாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது மோடியை தனியாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மோடி மற்றும் அமித்ஷாவை நம்பியிருந்த ஓபிஎஸ் அணிக்கு இந்த அழைப்பு கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனவே ஓ.பன்னீர் செல்வத்தை டெல்லி மேலிடம் கை கழுவியதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட செயல் திட்டம் என்ன என அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்
ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்