அமைச்சர் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைகிறார்? ஓபிஎஸ் அதிர்ச்சி..!
திடீரென ஓபிஎஸ் மற்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜ் அதிர்ச்சி அளித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்த நிலையில் அவர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணியில் முக்கிய தூணாக இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணிக்கு சவால் கொடுத்து வந்தார். குறிப்பாக கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமாரை தர லோக்கலாக இறங்கி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இபிஎஸ்க்கு எப்படி ஜெயக்குமாரோ, அதேபோல், ஓபிஎஸ்க்கு கோவை செல்வராஜ் இருந்து வந்தார்.
இதையும் படிங்க;- மரத்தில் துணியை சுற்றி வைத்தால் கூட அண்ணார்ந்து பார்ப்பவர் ஜெயக்குமார்.. பங்கமாய் கலாய்த்த கோவை செல்வராஜ்..!
இந்நிலையில், திடீரென ஓபிஎஸ் மற்றும் அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜ் அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகின்றனர். இவர்களுடைய செயல்பாடுகளை பார்க்கும் போது இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என இபிஎஸ், ஓபிஎஸ் என இருவருமே நான்கரை ஆண்டு காலம் செயல்பட்டு விட்டனர்.
ஜெயலலிதாவுக்காக நான் இந்த இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்றால் பிழைத்திருப்பார் என சொன்னார்கள். அப்போது அதிமுக ஆட்சிதான் நடந்தது. அவர்கள் நினைத்தால் ஜெயலலிதாவைக் காப்பாற்றியிருக்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் பதவியைத் தக்கவைப்பதில் குறியாக இருந்தனர். இனி இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன். திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம் ஆகும். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன் என்றார். இவர் எந்த கட்சியில் இணையபோகிறார் என்று பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இதையும் படிங்க;- கோவை செல்வராஜை நீக்கிய ஓபிஎஸ்..! புதிய மாவட்ட செயலாளரை நியமித்து அதிரடி
இந்நிலையில், கோவை மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன். திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம் என்று கோவை செல்வராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- இரண்டு அறிக்கைகள் குறித்து EPS வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக இருக்கு.. கொதிக்கும் கோவை செல்வராஜ்