AIADMK government is support Central Government injustice - Vaiko

கடலூர்

மத்திய அரசு தமிழகத்திற்கு செய்யும் அநீதிகளுக்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கிறது என்று கடலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

ம.தி.மு.க.வின் வெள்ளி விழாவையொட்டி கடலூர் மண்டல மறுமலர்ச்சி தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று கடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. 

இதற்கு தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, தொழிற்சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார்.

பின்னர் வைகோ செய்தியாள்ர்களிடம், "‘நீட்’ தேர்வு சமூக நீதியை அழிக்க கூடிய பெரும் கேடு. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் இந்தியில் வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்க நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் மாணவ - மாணவிகளை வெளிமாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத வைத்தார்கள். 

சோதனை என்ற பெயரில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். இப்போது கேள்வித்தாள் தமிழில் வரவில்லை என்பது மன்னிக்க முடியாத அநீதியாகும்.

காவிரி மேலாண்மை வாரியம், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மறுமலர்ச்சி தொழிற்சங்க மாநில செயலாளர் மணிமாறன், ம.தி.மு.க. நகர செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் கடல்செல்வம், 

ஒன்றிய செயலாளர் நாகை ஜெயசங்கர், மத்திய சங்க நிர்வாகிகள் முத்துகுமரசாமி, லட்சுமணன், கோபிநாதன், குமரவேல், தயாளன் உள்பட பலர் பங்கேற்றனர். 

இதன் முடிவில் துணை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றித் தெரிவித்தார்.