அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் முடிவெடுத்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்த பிறகு சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அதிமுக பொதுக்குழு நடைபெறவில்லை.

 

தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஓராண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்டி ஆக வேண்டும். அந்த வகையில் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெற்று பொதுக்குழுவை அதிமுக ஒத்திவைத்தது. இதன் பிறகு தேர்தல் பரபரப்பால் பொதுக்குழு நடைபெறவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்டி ஆக வேண்டும். எனவே இது குறித்து விவாதிக்கத்தான் நேற்று ஓபிஎஸ் இபிஎஸ்சை வீடு தேடிச் சென்று சந்தித்ததாக கூறுகிறார்கள். பொதுக்குழுவில் வழக்கம் போல் சில தீர்மானங்களை நிறைவேற்றவும் கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யவும் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இதே போல் கட்சியின் மிகவும் சீனியரான ஒருவர் கட்சியின் மதிப்பு மிகுந்த பதவியில் இருந்து வருகிறார்.

 

அவரை அந்த பதவியில் இருந்து மாற்ற எடப்பாடி தரப்பு மிகுந்த முயற்சியில் ஈடபட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த சீனியர் எடப்பாடியின் ஆதரவாளர். எனவே இது தொடர்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பில் சில முரண்பாடுகள் எழுந்தன. இதே போல் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் எடப்பாடி தரப்புக்கு ஓபிஎஸ் தரப்பு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இவை எல்லாம் பேசி தீர்த்த பிறகு பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள். காரசார விவாதத்திற்கு பிறகு நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட செயல்களில் அதிமுக தீவிரம் காட்டும் என்றும் பிறகு சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்த ஆண்டு முதலே தயாராவார்கள் என்றும் சொல்கிறார்கள்.