பொதுக்குழுவில் கே.பி முனுசாமி பேசிய பேச்சுகள் பார்க்கத்தான் வேண்டுகோள் ரகமாக இருந்தது ஆனால் உண்மையில் ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி தரப்புக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பதாகவே அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு கூடிய பொதுக்குழு என்பதால் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூட பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் சென்றனர். பெரும்பாலும் பொதுக்குழுவில் பேசிய அனைவருமே உட்கட்சி விவகாரத்தை தவிர்த்துவிட்டனர். ஸ்டாலின் எதிர்ப்பு, ரஜினியை சீண்டுவது, கமலை கிண்டல் அடிப்பது என தங்கள் பாணியில் எடப்பாடி, ஓபிஎஸ்க்கு ஐஸ் வைப்பது என பொதுக்குழு ஒரு பரபரப்பே இல்லாமல் சென்றது.

ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்குழுவில் காரசாரத்திற்கு பஞ்சம் இருக்காது. பொதுக்குழுவில் யாரும் பேச முடியாது என்றாலும் ஜெயலலிதா அனைவருக்கும் சேர்த்து பேசிவிடுவார். பகிரங்கமாக நிர்வாகிகள் பெயரை கூறி எச்சரிப்பார். சில சமயங்களில் பொதுக்குழுவில் அமைச்சர்களை மிரளக் கூட வைத்துள்ளார் ஜெயலலிதா. இப்படி எப்போதும் பரபரப்பாக நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் இந்த முறை எந்த சலசலப்பும் இல்லை.

ஆனால் கேபி முனுசாமி பேசிய பேச்சுகள் தான் அதிமுகவில் இன்னும் ஓபிஎஸ் – இபிஎஸ் என  இரண்டு அணிகள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. பொதுக்குழுவில் முனுசாமி பேசியவதாவது, அதிமுக விழாக்களில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒருவரை மட்டுமே புகழ்கிறார்கள். விழாக்களில் ஓபிஎஸ் தரப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இரண்டு பேருக்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும்.

ஒருவரை புகழ்ந்துவிட்டு மற்றொருவரை புகழவில்லை என்றால் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும். ஒரு சில கட்சி நிகழ்ச்சிகளில் நடைபெறும் சம்பவங்களால் மனது வலிக்கிறது. அதிமுக தற்போது ஒரு குடும்ப பிடியில் இல்லாமல் சுயமாக செயல்பட காரணம் யார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த நபருக்கு நாம் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . இவ்வாறு பேசினார் முனுசாமி.

கே.பி முனுசாமி தீவிர ஓபிஎஸ் ஆதரவாளர். ஆனால் சந்தர்ப்பவாதி. இடையில் எடப்பாடி தரப்பிடம் சென்ற அவரை அங்கு ஏற்கவில்லை. இதனால் தனியாக செயல்பட்டு வந்த அவர் திடீரென ஓபிஎஸ்க்கு ஆதரவாக பொதுக்குழுவில் முழங்கியுள்ளார். இதனை ஓபிஎஸ்சும் கூட ரசித்ததாக கூறுகிறார்கள். அதாவது இனி விழாக்கள் என்றால் ஓபிஎஸ்சையும் புகழ வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இனியும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அதிரடி காட்ட வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.