அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரியமா சுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அவர்கள் தனி நீமிபதியின் தீர்ப்பில் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர். ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணதத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று வாதிட்டனர். அடிப்படை உறுப்பினர்களால் பொதுசெயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான் எனவும் இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்தனர்.
அதில், ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.