Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 1 கோடி எப்போது தருவீர்கள்..? முதல்வருக்கு கேள்வி எழுப்பிய எடப்பாடி

‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை வழங்கக்கூட திமுக அரசுக்கு இயலவில்லை’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Aiadmk former cm edappadi palanisamy about dmk govt corona activity and tn govt
Author
Tamilnadu, First Published Dec 25, 2021, 1:36 PM IST

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பங்கையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் நேற்று வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக தற்போதைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Aiadmk former cm edappadi palanisamy about dmk govt corona activity and tn govt

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றினால் தான் இறந்ததாகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். உச்சநீதிமன்றமே 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட பின்பும், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை இந்த அரசு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Aiadmk former cm edappadi palanisamy about dmk govt corona activity and tn govt

இது சம்பந்தமான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்காதது குறித்து நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அறியும் வகையில், தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் இந்த நிவாரணத்தைப் பெறுவதற்கான முழு வழிமுறைகளோடு விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் இவ்வளவு கண்டிப்புடன் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட பின்பும், இந்த அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது, பாதிக்கப்பட்ட மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்றது முதல் மு.க.ஸ்டாலின் ஆடம்பர செலவுகளையும், தேவையில்லாத விளம்பர செலவுகளையும் செய்கிறாரே தவிர, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிய ஒரு கோடி ரூபாயை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தருவதை தற்போது யார் தடுக்கிறார்கள்?

Aiadmk former cm edappadi palanisamy about dmk govt corona activity and tn govt

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை வழங்கக்கூட திமுக அரசுக்கு இயலவில்லை என்றால், அரசின் திறமையின்மையை, இந்த அரசின் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் . இனியும் கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும்’ என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios