திமுகவில் பல ஆண்டுகாலமாக அதிமுகவினரின் சாம்ராஜ்யமே கொடி கட்டி பறக்கிறது. இப்போது செந்தில் பாலாஜி முறை. அவர் திமுகவில் இணைந்தது முதல் கிலியடித்துக் கிடக்கிறார்கள் பாரம்பரிய உடன்பிறப்புகள்.  

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என தி.மு.கவை நிறுவிய அண்ணா அப்போது செஒல்லி வைத்ததை விடாப்பிடியாக கடைபிடித்து வருகிறது திமுக. தமிழகத்தில் திமுக -அதிமுக என இரண்டும் தான் பிரதான கட்சிகள். தேசியகட்சிகள் தேய்பிறையாகி வருவதால் அதிமுகவிலிருந்தும் திமுகவுக்கும், திமுகவிலிருந்து அதிமுகவுக்கும் மாறுவதே வழக்கம்.

அதிமுகவை ஆரம்பித்து எம்ஜிஆர் வெற்றிபெற்ற பிறகு தாவல்கள் அதிகரித்தது. வந்தவர்களுக்கு எல்லாம் பதவி நாற்காலிகளை கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். தன்னை தி.மு.க.வில் இருந்து வெளியேற்ற வழிமொழிந்த நெடுஞ்செழியனையே, தனது அமைச்சரவையில் தனக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்த்தார். பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் கட்சித்தாவல்கள் அதிகரித்தன. ஆனால் மாற்று கட்சியில் இருந்து வருபவர்களை எட்டவே வைத்திருந்தார் ஜெயலலிதா.

சென்னையின் பரிதி இளம் வழுதி. சேலத்து அர்ஜுனன் என யார் வந்தாலும் ஒரே அளவு கோலில் வைத்திருப்பார் ஜெயலலிதா. எம்.எல்.ஏ சீட்டோடு முடித்துக் கொள்வார். ஆனால் திமுகவில் நிலைமை தலை கீழ். சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு ஆகியோர் அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் கோலோச்சுகின்றனர். அதிலும் எ.வ.வேலுவின் கண்ணசைவில் தான் மு.க.ஸ்டாலினே இயங்குவதாக அக்கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்ததுண்டு.

கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, சேகர்பாபு உள்ளிட்டோர் உள்ளூர் திமுக புள்ளிகளை ஓரம் கட்டி விட்டு மாவட்ட செயலாளர் பதவியை பிடித்த அதிமுக மாஜிக்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஜெகத்ரட்சகன், செல்வகணபதி, ஆஸ்டின் போன்றோர் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் உயரம் தொட்டவர்கள்.

அந்த லிஸிடில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் செந்தில் பாலாஜி. கட்சியில் இணைந்த வேகத்திலேயே கரூர் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்து விட்டார். ஏற்கெனவே கட்சியில் இருந்த முக்கிய புள்ளியான நன்னியூர் ராஜேந்திரன் பதவியை அடைந்து கரூர் திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி. இதனால், கரூர் மாவட்ட திமுகவின் பழைய ஜாம்பவான்கள் கதி கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.

அடுத்து வரும் தேர்தலில் திமுக ஆட்சியமைத்தால் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி நிச்சயம். திமுகவை வழி நடத்துவதிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள். ஆக திமுகவில் அதிமுகவினரின் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப்பறக்கிறது. எதிரி கட்சியான அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கெல்லாம் பெரும் பதவிகளை கொடுக்க மனமுவக்கும் மு.க.ஸ்டாலின், ஒரு காலத்தில் தென் மாநிலத்தில் கொடிகட்டிப்பறந்த தனது உடன் பிறந்த சகோதரரான மு.க.அழகிரியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டாரே என கலங்குகிறார்கள் திமுகவில் உள்ள சில நிர்வாகிகள்.