உண்மையான திராவிடன் செல்லவேண்டியது கமலாலயம் அல்ல.. அறிவாலயம்... திமுகவில் இணைந்த அதிமுக முக்கியப்புள்ளி.!
அதிமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு அதிமுகவில் எந்தவிதப் பலனும் இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல்லை மாநகராட்சியின் மேயராகவும், பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து, தற்போது அதிமுக மாநில மகளிரணிச் செயலாளராக இருக்கும் விஜிலா சத்யானந்த் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜிலா சத்யானந்த்;- பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இணைந்திருக்கிறேன். முதற்கட்ட அளவிலேயே முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 10 மாவட்ட ஆட்சித்தலைவர்களில் பெண்கள் நியமனம் என பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனக்குப் பிடித்து இருந்தது.
ஜெயலலிதாவிற்குப் பின் அதிமுக உண்மையான திராவிடன் செல்லவேண்டியது கமலாலயம் அல்ல, அறிவாலயம். திமுக தொண்டனாக நான் பணியாற்ற விரும்புகிறேன். அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது முதல் வரிசையில் அமர வைக்கப்பட்ட மகளிரணியினர், இப்போது ஒதுக்கப்பட்ட ஒரு நிலையில்தான் உள்ளனர். அதிமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு அதிமுகவில் எந்தவிதப் பலனும் இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.