போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜகவில் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை 8 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் அருகே உள்ள சாமி நாயக்கன் தெருவுக்கு சென்றுள்ளார். சாமி நாயக்கன் தெருவுக்கு சென்ற பாலசந்தர் அங்கு சாலையோரத்தில் தனது நண்பர்கள் சிலருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாலசந்தரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

வெட்டுப்பட்ட பாஜக நிர்வாகி பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்னை காவல் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் வந்து சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த கொலைச் சமபவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்பு காவலர் கேட்டிருந்ததும் அதன்பேரில் பாலச்சந்தருக்கு பாதுகாப்பு காவலர் வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசி விட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ அருந்தி விட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
அதில், ‘தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும்அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு ?’ என்று பதிவிட்டுள்ளார்.
