மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளன்று கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு எடுக்காததால் அதிமுக தொகுதி அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், ஒரு ராஜ்யசபா எம்பி சீட், பாஜகவுக்கு 5 சீட் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். இதை ஏற்க தேமுதிகவினர் மறுத்து விட்டனர். வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு வைத்திருக்கும் பாமகவை விட நாங்கள் குறைந்தவர்கள் அல்ல. அவர்களை விட அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

இந்த கோரிக்கையை அதிமுகவினர் மறுத்து விட்டனர். இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அதிமுகவுடன் வட்டணி வைக்க வேண்டும் என்றால் பாமகவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த நாளே ரஜினி மற்றும் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தனர். 

இந்நிலையில் அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முதல் தேமுதிக சார்பில் 40 தொகுதிகளில் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி தொடங்கியுள்ளது. இது முதல்வர் எடப்பாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதிமுக தரப்பில் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறி வருகிறார்.  

இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று யார், யாருக்கு எந்தெந்த தொகுதி என்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று அதிமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் தரப்பில் முடிவு அறிவிக்கப்படாததால் தொகுதி அறிவிப்பு தள்ளிப்போகிறது. மேலும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கினால் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பாஜக சார்பில் தேமுதிகவை சமரசம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.