அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அமைச்சர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷுக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் ராஜேஷ், அவரது தாயார், அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், தாயார் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவருக்கும் எந்தவித அறிகுறியும் இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.