அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். 

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய விவாதமாக அடுத்து வரவிருக்கும், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு வலுப்பெறுவது என்பது குறித்தும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து  விவாதிக்கப்படுவதாக தெரிகிறது. அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரும் 30ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவது குறித்தும் மா.செ. கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், பாஜகவுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் நீதிமன்ற தீர்ப்பின் முடிவில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும், உட்கட்சி பூசல் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.