முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆட்சியை நடத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் கட்சியை நடத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதன் பரபரப்பு குற்றம்  சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தலில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுகவினர் இரு அணிகளாக போட்டியிட்டதில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களை, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் அணியினர் கடத்த துவங்கி உள்ளதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். கூட்டுறவு வங்கி தேர்தல் முடிவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகதான், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆட்சியை  நடத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், கட்சியை நடத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. 

 ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன் ஆலோசகராக செயல்படுவதாகவும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பில் தளவாய்சுந்தரம் ஆலோசராக செயல்படுகின்றனர். இவர்கள் இருவரும் கட்சியை அழித்து கொண்டிருக்கின்றனர்.  இதுகுறித்து பலமுறை நான் முதலமைச்சர், துணை முதலமைச்சரிடமும் தெரியப்படுத்தியும் இது குறித்து கவனம் செலுத்த வில்லை. மாறாக, ஆட்சியை நடத்திவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதுகுறித்து யாரிடம் முறையிட்டாலும் கேட்கப்போவதில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் 
ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.

 

 தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி  ஆகிய மூன்று மாவட்டங்களில் கட்சியை அழித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  தொண்டர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு,  மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மற்றும் கழக அமைப்புச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்ட சின்னத்துரை இம்மூவரும் கட்சியை அழித்து வருகின்றனர் என்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீதான, சண்முகநாதனின் குற்றச்சாட்டு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.