எடப்பாடி அண்ணே நீங்கதான் பொதுச்செயலாளர்!.. கைவிட்ட பாஜக.. காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - தர்மயுத்தம் 2.0 ரெடி
2021 தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும், ஆட்சியை இழந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகிய இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் இன்று வரை சட்டபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், ஓபிஎஸ்-சின் அரசியல் எதிர்காலம் பூஜ்யம் தான் எனக் கூறுகிறது ஈபிஎஸ் தரப்பு. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை என்கிறது ஓபிஎஸ் அணி.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் போல, கூண்டோடு நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் அணிக்குத் தாவினால் என்னவாகும் என்பதே ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களின் கவலையாக இருக்கிறது.
இன்று ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலை மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். இந்த தீர்ப்பு மகத்தான, வெற்றிகரமான தீர்ப்பு. இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு. அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது.
இதையும் படிங்க..நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?
எடப்பாடி. கே. பழனிசாமி தலைமையில் அதிமுக உள்ளது. 99 சதவீத நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி. கே. பழனிசாமி தலைமையில் தான் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். விரைவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தலைமைக் கழகம் முடிவு செய்யும் என்று அதிரடியாக கூறினார்.
அடுத்து பேசிய அதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் தம்பிதுரை, உண்மையான அதிமுக தொண்டர்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்த பக்கமே உண்மையான தீர்ப்பு வந்திருக்கிறது. உண்மையான அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் என உச்ச நீதிமன்றத்திலேயே தீர்ப்பு வந்துவிட்டது. ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் தினத்திற்கு முன்பாக எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிமுக தொண்டர்களிடையே எந்த ஒரு விரிசலும் இல்லை. நாங்கள் எப்பவும் போல் ஒன்றிணைந்து தான் இருக்கிறோம். எனவே, இரட்டைத் தலைமைக்கு என்றுமே வாய்ப்பில்லை; ஒற்றைத் தலைமை தான் நிரந்தரம் என்று கூறினார். ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், நிச்சயம் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவ வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க..ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்த்து திமுகவுக்கு பயமா.? முதல்வரை எது பயமுறுத்துகிறது.? பாஜக குஷ்பு அதிரடி