இமயமலைபோல் உள்ளது. இதை எந்த நரகாசுரனாலும் அழிக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

பின்னர், அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நமது நாட்டில் உள்ள நரகாசுரன்களை அடையாளம் காட்டி வைத்துள்ளார். அவர்களை நாம் எதிர்க் கொண்டு, அவர்களை தடுத்து நிறுத்தி, போராடி வருகிறோம்.

அதிமுக என்ற இயக்கத்தை அழிக்க பலர் முண்டித்து கொண்டு இருக்கிறார்கள். அதை நாம் எதிர்த்து போராடி வருகிறோம். அதிமுக அரசையும், இந்த இயக்கத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை, ஜெயலலிதா அடையாளம் காட்டிவிட்டார். அதை நாங்கள் பின்பற்றி, இயக்கத்தை காப்பாற்றி வருகிறோம். 

இந்த இயக்கம் இமயமலைபோல் உள்ளது. இதை எந்த நரகாசுரனாலும் அழிக்க முடியாது. அறிஞர் அண்ணா சொன்னதை போல், கொட்டி வைத்த செங்கற்களாக இல்லாமல், மாபெரும் கட்டிடமாக இருக்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் ஆண்டு தோறும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை காலராவால் இறந்துள்ளனர். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோதும், திமுக ஆட்சியிலும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். 

ஆனால், தற்போதுள்ள சீதோஷண நிலையை கருத்தில் கொண்டு, அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து வருகிறது.‘20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்தால், நாங்கள் சந்திக்க தயார். அதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக இருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அதை அவர்களிடம் கேட்க வேண்டும். தேர்தலில் யார் போட்டியிடுவது, யாரை நிறுத்துவது, தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி ஆட்சி மன்ற குழு கூடி முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.