கட்சியை தொடங்கிய பிறகு தான் கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்வார் என முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 இடங்களிலும், தேமுதிக 4, தமாகா ஒரு இடத்திலும் போட்டியிட்டது. அதிமுகவுடனான ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டது. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி.யாக்கப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் 3 எம்பி பதவியை யாருக்கு வழங்குவதில் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மூத்த தலைவர்கள் தங்களுக்கு எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு மாநிலங்களவை பதவியை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறது. 

தேமுதிக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் கூட்டணியில் உள்ள பாஜகவும் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. 
மக்களவை தேர்தலில் கேட்ட தொகுதியை தான் தரவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள எங்களால் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவால் தான் தமிழகத்தில் ஆட்சியை இன்னும் நீடித்து வருகிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், மக்கள் திட்டங்களை எடுத்து செல்லும் வகையில் எங்களுக்கும் மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகின. 

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை பதவியை பெற பாஜக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கட்சியை தொடங்கிய பிறகு தான் கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்வார். அரசியல் என்பது திரைப்படம் அல்ல என்றும் இதை கமல்ஹாசனும் புரிந்திருப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார். தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்; எதிர்க்கட்சிகள் எங்களை தயார்படுத்துக்கின்றனர் என்றார்.