Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசை விடாமல் தாக்கும் அதிமுக..! அடுத்த போராட்டத்திற்கு தேதி அறிவித்த எடப்பாடி பழனிசாமி

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

AIADMK announces protest against DMK government for failing to control price rise
Author
First Published Jul 13, 2023, 1:59 PM IST

விலைவாசி உயர்வு- பொதுமக்கள் பாதிப்பு

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ் நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

AIADMK announces protest against DMK government for failing to control price rise

மீண்டும் தமிழகத்தில் மின் வெட்டு

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.தமிழ் நாட்டு மக்கள் 10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு. 

AIADMK announces protest against DMK government for failing to control price rise

வரி உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

மனசாட்சியற்ற இந்த விடியா அரசு, கழக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள்; அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை உயர்வு - இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு: பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு; வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் வானளாவ உயர அனுமதித்தது இந்த விடியா திமுக அரசு. இது போதாதென்று, விடியா திமுக அரசு, பத்திரப் பதிவுத் துறையில், மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது.

AIADMK announces protest against DMK government for failing to control price rise

திமுக ஆட்சியில் ஊழல்

சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடாக முதலமைச்சரின் மகனும், மருமகனும் ஓர் ஆண்டில் சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை; எந்த ஒரு விசாரணையும் இல்லை. நாட்டில் அனுமதியின்றி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது என்று நான் குற்றச்சாட்டு வைத்து, கழகம் போராடிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது விடியா அரசு என்றால், இரண்டாண்டு காலம் அந்த பார்கள் அனுமதியின்றி இயங்கியது உண்மைதானே.

AIADMK announces protest against DMK government for failing to control price rise

மத்திய அரசு மீது பழி

அப்படியெனில், இரண்டாண்டுகள் அந்த முறையற்ற பார்களில் இருந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது தெரிய வருகிறது. தமிழ் நாட்டில் இவ்வளவு அவலங்கள், வன்முறைகள், விலைவாசி உயர்வு, பல்வேறு துறைகளில் ஊழல் ஆகிய எதையும் கண்டுகொள்ளாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு திரு. மு.க. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார். முதலமைச்சரின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக்கொள்கிறேன். 

AIADMK announces protest against DMK government for failing to control price rise

அதிமுக போராட்ட அறிவிப்பு

இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 20.07.2023 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுகவின் ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான்..! ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்கும் எச்.ராஜா

Follow Us:
Download App:
  • android
  • ios