விருதுநகர்

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் களைப்படைந்த குதிரைகள் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மே 6-இல் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான இடத்தை பார்வையிட நேற்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதது, தமிழக மக்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. காவிரி நீர் என்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கான பிறப்புரிமை. ஒவ்வொரு கட்சிக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைய ஆளும் கட்சி நடத்தும் அனைத்து கட்சி கூட்டமே பயனளிக்கும். திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தினால் எந்த பயனும் இல்லை. 

அதேபோல ஆளும் கட்சி நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டங்களை தவிர்த்து, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேறுவிதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

தமிழக மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஒரு வெற்று அறிக்கையாக இல்லாமல் மனப்பூர்வமான போராட்டங்கள் நடத்த வேண்டும். 

இந்தியாவை ஆள நினைக்கும் காங்கிரசு கட்சி ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க மறுக்கிறது? 

தமிழக மக்கள் மீது வேற்று மொழியை திணிக்கக் கூடாது என கூறும் ராகுல்காந்தி, ஏன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக மக்களுக்காக முழுமையாக நிறைவேற்ற கோரி நாடாளுமன்றத்தை முடக்க கூடாது? 

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் களைப்படைந்த குதிரைகள். இவர்களால், இனிமேல் எந்த நல்ல திட்டமும் வராது, செயல்படுத்தவும் மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.