அகில இந்திய அளவில் இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமாக எதிர்கட்சிகளிடம் திட்டு வாங்கிய ஒரு கூட்டணி எது? என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம், ‘தமிழகத்தின் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணிதான்.’ என்று. அந்தளவுக்கு மிக மிக தாறுமான தரக்குறைவாக இந்த கூட்டணியை தினம் தினம் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது எதிரணியான தி.மு.க. கூட்டணி. 

எடப்பாடி - ராமதாஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ‘சூடு, சொரணை இருக்குதா?’ என்று சொல்லி இந்த அர்ச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டார் ஸ்டாலின். அரசியலரங்கில் பெரும் அதிர்வையும், விவாதத்தையும் கிளப்பிய விமர்சனம் அது. தன் மீது வைக்கப்பட்ட மிக மோசமான விமர்சனங்களிலேயே முக்கியமான ஒன்றாக இதை பார்க்கிறது பா.ம.க. இந்த கூட்டணி அமைந்து இத்தனை நாட்களாகியும் கூட இன்னமும் பா.ம.க.வை விட்டு விலக மாட்டேன்! என்று அடம் பிடிக்கின்றனர் தி.மு.க.கூட்டணியினர். 

அந்த வகையில் அக்கட்சியின் ஸ்டார் பேச்சாளராக வலம் வருபவரான ராதாரவி....”இந்த மாதிரி மானங்கெட்ட கூட்டணியை நான் பார்த்ததேயில்ல. அய்யா, தான் விமர்சித்த கட்சியோடு கூட்டணி வைப்பது இயல்புதான். தி.மு.க.வும் இதைப் பண்ணியிருக்குது. ஆனால் ‘திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி வைப்பது என்பது! தாயுடன்...’ அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கு மறுபடியும் போயி மானமே இல்லாம ஏழு சீட்டு வாங்கியிருக்கிறது கடைஞ்செடுத்த கேவலத்தனம். இதுல விஜயகாந்த வேற இழுத்து உள்ளே போட்டுக்கிட்டிருக்காங்க. 

பாவம் அந்த மனுஷனுக்கு, நாம இப்ப எங்கே இருக்கோம்! என்ன நடக்குது?ன்னு எதுவும் புரியாது, தெரியாது. இந்த பா.ம.க. நிர்வாகிங்க ரெண்டு பேரும் விஜயகாந்த் வீட்டுக்கு போயி சால்வை போட்டாங்க, ஆனா தனக்கு சால்வை போட்டுவிட்டது யாருன்னு கூட அவருக்கு கண்டிப்பா தெரியாது. எதையுமே புரியாத நிலைக்கு போயிட்டாரு மனுஷன் பாவம். அவரைப் போயி பிரசாரத்துக்கு கூப்பிட்ட வாசனை என்னான்னு சொல்ல?” ரகளையாக என்று தாளித்திருக்கிறார் ராதாரவி. 

இதே போல் பா.ம.க.வை இன்னொரு பக்கம் ஒரு பிடி பிடித்திருக்கும் மாஜி காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் “பா.ம.க. மற்றும் பா.ஜ.க.வோடு சேர்ந்த குத்தத்துக்காக பல தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். இதை கொள்கை கூட்டணி, யதார்த்த கூட்டணிங்கிறாரு ஹெச்.ராஜா. ஒரு வெங்காயமுமில்லை. பா.ம.க.வை பொறுத்தவரைக்கும் எலெக்‌ஷன் நேரத்துல கட்சியை வெச்சு பேரம் பேசுறது, கலெக்‌ஷன் எடுக்குறது! இது ரெண்டும்தான் டார்கெட்டே. துட்டுக்காகதான் அந்த ஒப்பேறாத கூட்டணியில போயி குந்தியிருக்கிறார் ராமதாஸ்.

இதை மக்களும் தெளிவாதான் புரிஞ்சு வெச்சிருக்காங்க. ஏதேதோ சொல்லி ஏமாத்தலாமுன்னு பார்த்தால், மயங்குற ஆளுங்க இல்லை மக்கள். தெளிவா இருக்காங்க. தெளியத்தெளிய அ.தி.மு.க. கூட்டணியை அடிச்சு வெரட்டுவாங்க பாருங்க.” என்று அடிச்சு தூக்கியிருக்கிறார். கொழாயடிய விட சண்டைய விட மோசமா இருக்குதே வார்த்தைகள்!