மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன் என்கிற பழமொழியை போலத்தான் இருக்கும் தேர்தல் நேரத்தில் சீட் வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகளின் நிலைமையும். அதுவும் அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். 

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல எல்லோருக்கும் பதவி ஆசைக்கு திரி கொழுத்தி வருகிறார்கள். அதிலும் தீப நகரமான திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள அதிமுகவினரின் பதவி ஆசை ஆளாளுக்கு பற்றி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. 
 
தற்போதைய நிலையில் அதிமுகவில் அதிக கோஷ்டிப் பூசல்கள் நிலவும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் அங்குதான் வரும் மக்களவை தேர்தலில் எபடியும் எம்.பி சீட்டை பிடித்தே ஆகவேண்டும் என டஜன் கணக்கான அதிமுகவினர் துண்டைப்போட்டு காத்திருக்கிறார்கள். இதனால் அங்கு கலாட்டா கலைகட்ட ஆரம்பித்து இருக்கிறது. 

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தார். எனவே, இப்போது ஓபிஎஸ் கோட்டாவில் எம்பி சீட் வாங்கிவிடுவது முடிவு செய்து காய்களை நகர்த்தி வருகிறார். அதேபோல், தற்போதைய மாவட்ட செயலாளர் ராஜன் தனக்குதான் சீட் என உறுதியாக நம்புகிறார். அதேபோல், ஆரணி தொகுதியில் எம்.பி சீட் வாங்கியே தீருவேன் என போளூர் தொகுதி முன்னாள் பெண் எம்எல்ஏ, கட்சியின் மேலிட நிர்வாகிகளிடம் அடம் பிடித்து வருகிறார். ஒன்றிய செயலாளர், மாநில மகளிர் அணி துணை செயலாளர்  என ஜெயசுதா லட்சுமிகாந்தன் கட்சியில் இரட்டை பதவியை பிடித்தும் அவருக்கு பதவி ஆசை விடவில்லை என அக்கட்சியினர் புலம்புகிறார்கள். 

 

ஆனால், உள்ளூர் அமைச்சரான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. திருவண்ணாமலை தொகுதியை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு தள்ளிவிடவும், ஆரணி தொகுதியை தன்னுடைய மகன் விஜயக்குமார் என்கிற விஜய்க்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார். 

பதவியில் இருக்கும்போதே, மகனை அரசியலில் கரை சேர்த்துவிட அமைச்சர் துடிப்பதை அறிந்து, சொந்த கட்சியினர் கொதிப்படைந்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வருவதைப்போல எம்.பி சீட் வாங்குதற்காக அதிமுக தலைமையை சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள் அம்மாவட்ட உடன்பிறப்புகள். இதில் உண்டியல் யாருக்கோ... உடை தேங்காய் யாருக்கோ..?