நீண்ட இழுபறிக்கு பின் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெற்றி பெற்ற 37 அதிமுக எம்.பி.க்களில் 6 பேருக்கு மட்டுமே தேர்தலில் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் அதிமுகவுக்கு 20, பா.ஜ.க.வுக்கு 5, பாமகவுக்கு 7, தேமுதிகவுக்கு 4, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டார். இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று இரவு 10 மணியளவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் 2014-ம் ஆண்டு போட்டியிட்ட தேர்தலில் அதிமுக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு, 20 தொகுதிகள் அதிமுகவுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 20 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட எம்.பி.க்கள் விவரம்...

1. திருவள்ளூர் - பி. வேணுகோபால்

2. தென்சென்னை- ஜெ. ஜெயவர்த்தன்

3. காஞ்சிபுரம்- மரகதம் குமரவேல்

4. ஆரணி- வெ. சேவல் ஏழுமலை

5. கரூர்- மு. தம்பிதுரை

6. பொள்ளாச்சி- சி. மகேந்திரன்