நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக வேளாண் மண்டலத்திற்கு அனுமதி வாங்கி தர வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

2020- 2021-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 10-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், 15-வது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் இடையே வேளாண் மண்டலம் பற்றி பேரவையில் ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை என திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிக எம்.பி.க்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தரலாமே? 3-வது பெரிய கட்சி திமுக என்கிறீர்களே, நீங்கள் செய்ய வேண்டியதுதானே? என எதிர்கேள்வி எழுப்பினார்.

முதல்வர் கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அதிமுக அறிவித்ததை முழுமனதாக நாங்கள் வரவேற்கிறோம். மேலும், நாங்கள் மத்திய அரசுடன் எதிரும், புதிருமாய் உள்ளோம். நீங்கள் இணக்கமாய் உள்ளீர்கள் என்றார்.