திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  

வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்துடன் இணைந்துதான் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வந்தன. இரண்டு மாவட்டங்களிலிருந்து, நாள்தோறும் சுமார் ஐந்து லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றில் இரண்டு லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ளவற்றில் பால் பாக்கெட், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி, குல்ஃபி உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு என புதியதாகத் தனி கூட்டுறவு ஒன்றியம் ஏற்படுத்தப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து, ஆகஸ்ட் 28-ம் தேதி வேலூர் ஆவினிலிருந்து திருவண்ணாமலை ஒன்றியம் பிரிக்கப்பட்டு 17 பேர்கொண்ட இடைக்கால நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேரடியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணாபுரம் பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பச்சமுத்து மற்றும் சுதாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கூட்டுறவு விதிகளைப் பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது. தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பதிவாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சரேஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே  இதுபோன்ற உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்திருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து ஜனவரி 7-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.