மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை அ.தி.மு.கவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் போர்க்கொடி தூக்கியுள்ளார். வட சென்னையில் ஜெயலலிதா இருக்கும் போதே மதுசூதனன் – ஜெயக்குமார் இடையே அ.தி.மு.கவில் உட்கட்சி பூசல் இருந்தது. ஜெயலலிதா இருந்த காரணத்தினால் அது வெளிப்படாமல் இருந்தது. 

ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின் போது மதுசூதனனை ஓரம் கட்ட ஜெயக்குமார் எவ்வளவோ முயன்றார். தனது ஆதரவாளரான பாலகங்காவை எப்படியாவது ஆர்.கே.நகர் வேட்பாளர் ஆக்க வேண்டும் என்று ஜெயக்குமார் பிரம்மபிரயத்தனம் செய்தார்.

ஆனால் சசிகலாவுடன் பிரச்சனை ஏற்பட்ட போது தன்னுடன் வந்த மதுசூதனனுக்காக ஆர்.கே.நகர் தொகுதி பாலகங்கா வசம் செல்லாமல் ஓ.பி.எஸ் தடுத்துவிட்டார். மேலும் மதுசூதனனை ஆர்.கே.நகர் வேட்பாளராகவும் அ.தி.மு.க அறிவித்தது. 

ஆனாலும் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோல்வி அடைந்தார். இதற்கு காரணம் என்று கூறி ஒரு கடிதத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சுக்கு மதுசூதனன் அனுப்பி வைத்தார்.  அந்த கடிதத்தில் தனது தோல்விக்கு காரணம் ஜெயக்குமார் தான் என்று மதுசூதனன் குற்றஞ்சாட்டியதாக அப்போதே புகார் எழுந்தது. 

மேலும் மதுசூதனன் கூறிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ.பி.எஸ் உறுதி அளித்தார். இந்த நிலையில் கடந்த வாரம் வட சென்னை மீனவ குப்பங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர தனது வேட்பாளர்களை மதுசூதனன் களம் இறக்கினார்.

மீன்வளத்துறை ஜெயக்குமாரும் தனது ஆதரவாளர்களை கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வைத்தார். இதனால் வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.கவின் மதுசூதனன் – ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 

மேலும் கூட்டுறவு சங்க தேர்தலையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயக்குமார் ஒத்திவைக்க வைத்தார் என்கிற புகார் எழுந்தது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் மதுசூதனன், ஜெயக்குமாருக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு காரணமான ஜெயக்குமார் மீது அ.தி.மு.க தலைமை தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்க மதுசூதனன் திட்டமிட்டுள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்தார். 

இது குறித்து அறிந்த ஓ.பி.எஸ்., மதுசூதனனை நேரில் அழைத்து பேசியுள்ளார். மேலும் முதலமைச்சரின் வலது கரமாக இருப்பவரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியையும் மதுசூதனன் இரவு சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஜெயக்குமாரை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால் தான் செய்தியாளர்களை சந்தித்து பேசுவது உறுதி என்று கூறிவிட்டு மதுசூதனன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அ.தி.மு.கவில் இருபெரும் தலைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் அந்த கட்சிக்குள் மறுபடியும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.