அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் விரைவில் பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவருடைய முடிவை கைவிடும்படி கட்சி மூத்த தலைவர்கள் ராகுலை வலியுறுத்தினர். ஆனால், ராகுல்  தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரிய கமிட்டி நியமித்தது. ஏற்கனவே எடுத்த முடிவின்படி புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவியேற்ற போதும் அரசியல் நிகழ்வுகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் சோனியா காந்தி பங்கேற்பதில்லை. அண்மையில் நடந்துமுடிந்த ஜார்கண்ட் தேர்தலில்கூட சோனியா பிரசாரத்துக்கு செல்லவில்லை. மாறாக, கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ராகுல் காந்தி அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதைக் குறைத்திருந்தார். ஆனால், அண்மைக் காலமாக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுவருகிறார். குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டிவருகிறார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலிலும் ராகுல் காந்திதான் பிரசாரத்துக்கு சென்றார்.
எனவே ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுலுடன் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பேசியிருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் டெல்லி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.