திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கேரளாவுக்கு அடுத்தபடியாக பஞ்சாப் சட்டசபையிலும் இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.   இந்த சட்டம் இஸ்லாமியர்களை  தனிமைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது என கூறி இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது .  கேரளா ,  மேற்கு வங்கம் , வடகிழக்கு மாகாணங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அம்மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன இந்நிலையில் இச்சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்த முடியாது எனக் கூறி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

அதற்காக நடைபெற்ற சிறப்பு கூட்டத் தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் , இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் ,  அந்த தீர்மானத்தில் அவர் குற்றஞ்சாட்டினார்.  இந்நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு  எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றுள்ளது அதே நேரத்தில் தங்களது மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .  இவ்விரு முதலமைச்சர்களின் நடவடிக்கை இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநிமும் அதன் சட்டசபையில் இன்று சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது . 

அதில்,  பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட இச் சட்டத்தை நாடு முழுவதும் மக்கள் எதிர்த்து வருகின்றனர் ,  நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் அமைதியின்மையும் இச்சட்டத்தால் ஏற்பட்டுள்ளது .  பஞ்சாப் மாநிலத்திலும் இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது .  குடியுரிமை வழங்குவதில் மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு பாகுபாட்டையும் காட்ட வேண்டாம் .  அதேபோல இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தவர்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் .  இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இச்சட்டம் உள்ளதால் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி சட்டசபையில் இத்தீர்மானத்தை கொண்டுவருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .