Tamilnadu Rains | சென்னைக்கு அண்ணாமலை, குமரியில் இவரா.. வைரலாகும் பாஜ.க. எம்.எல்.ஏ.-வின் போட்டோ ஷூட் வீடியோ.!
டியூபில் வந்த இளைஞர் அவரை, தள்ளிக்கொண்டு வந்தவரை விட ஆரோக்கியமாகவே இருக்கிறார். விளம்பரத்திற்காகவே பா.ஜ.க.-கவினர் இதுபோல் செயல்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
டியூபில் வந்த இளைஞர் அவரை, தள்ளிக்கொண்டு வந்தவரை விட ஆரோக்கியமாகவே இருக்கிறார். விளம்பரத்திற்காகவே பா.ஜ.க.-கவினர் இதுபோல் செயல்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் கனமழை வெள்ள பாதிப்பிலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் படகு பயணம் நெட்டிசன்களை சிரிப்பூட்டியது. முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்ற அண்ணாமலை, அங்கு படகில் பயணம் செய்தார். முழங்கால் அளவு கூட தண்ணீர் இல்லாத நிலையில் அவர் படகில் சென்ற காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியது. அதிலும், அவர்கள் அழைத்து வந்த போட்டோகிராபர், யார், யார் எங்கு நிற்க வேண்டும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியதும் வீடியோவாக வெளியாகியது. கட்சி நிர்வாகிகளும், அண்ணாமலயிடன் அப்படி, இப்படி என வளைத்து, வளைத்து போட்டோ எடுக்க ஐடியாக்களை அள்ளி வீசியதும் வீடியோவில் பதிவாகியிருந்தது. மழை, வெள்ள காலத்தில் வெறும் அரசியலுக்காக அண்ணாமலை இப்படி செய்ததாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்தநிலையில் தான், சென்னையில் மழை ஓய்ந்து வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. நீடிக்கும் கனமழையால் குமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளிக்கிறது. தண்ணீர் வெளியேற வழியில்லாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழுவதும் நிரம்பி தாமிரபணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகள் ஆறுகளாக காட்சியளிப்பதால் மீட்புப் பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரயில் சேவையும் முடங்கியுள்ளது.
கனமழையால் உருக்குலைந்துள்ள கன்னியாகுமரியில் அரசு அதிகாரிகள், மீட்புப் பணியாளர்கள் உடன் அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வான ஆர்.காந்தியும் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பூமா தேவிக்கு வலிக்கும் என்பதால் செருப்பு அணியக் கூடாது என்பதை கொள்கையாக கொண்ட ஆர்.காந்தி, கனமழை பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். இந்தநிலையில் தான் மழை வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.காந்தியும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் அருகே எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், முழங்கால் அளவிற்கும் மேல் தண்ணீர் நிற்கும் இடத்தில் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.-வான ஆர்.காந்தி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருடன் ஒரு சில தொண்டர்களும் இருக்கின்றனர். வீடியோவை பார்க்க தொடங்கும் போது இந்த வயதிலும் ஆர்.காந்தி களத்தில் கலக்குகிறாரே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி விடுவார்கள். இளைஞர் ஒருவரை காற்று அடைத்த லாரி டியூபில் வைத்து பா.ஜ.க. தொண்டர்கள் தள்ளி வருவதும் வீடியோவில் இடம்பிடித்துள்ளது.
அப்போது, வெள்ளத்தில் சிக்கியவர்கள் அல்லது நோயாளி யாரையோ பா.ஜ.க.-வினர் அழைத்து வருவதாக எண்ணி அந்த வீடியோவுக்கு பின்னணி இசையெல்லாம் சேர்த்து பரப்பி வருகின்றனர். வீடியோவில் காந்தியை படகு நெருங்கியதும் டியூபில் இருந்து அந்த இளைஞர் எழுந்து நடக்க தொடங்கி விடுகிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் குபீரென சிரித்து விடுகின்றனர். டியூபில் அழைத்து வரப்பட்ட இளைர் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். ஆனால் அவரை தள்ளிக்கொண்டு வருபவர்கள் அவரை விட முதியவர்களாக உள்ளனர். அவரை அங்க்கேயே விட்டிருந்தால், அவராகவே நடந்து சென்றிருப்பார் என்று பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்னம் பாஜக-வுக்கு கிடையாது, உதவுவதை போல நடிக்கிறார்கள், இதற்காக தான் இப்படி போட்டோ ஷூட் நடத்துகிறார்கள் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.