காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் 6 வாரம் கெடு விதித்துள்ள நிலையில், அந்த 6 வாரம் முடிந்த பிறகே       அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என முலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

கெடு தேதி முடிய இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்பிரச்சனையில் 6 வாரம் முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.