பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு,தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இன்று பசுமை வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அனல் பறக்கும் விவாதம் அநடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம், 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக, கடந்த மே மாதம் 29-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது. இதுவரை 13 நாட்கள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 14-ந் தேதிக்கு பிறகு சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகை விடுமுறை உள்பட பத்துநாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை தொடங்கவுள்ளது.

வனம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி, உள்ளாட்சித் துறை,தொழில் துறை, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி என சில பிரதான துறைகளின் மானியக் கோரிக்கைகள் ஏறகனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று  செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதங்களின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

காவல் துறை மானியக் கோரிக்கை வரும் செவ்வாய்க்கிழமையன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். சட்டமன்றம் கூட்டத் தொடர் பத்து நாள்களுக்குப் பிறகு மீண்டும்கூடவுள்ள நிலையில், பசுமைவழிச்சாலை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.