வேல் யாத்திரைக்கு எதிராக தமிழக அரசு தடை விதித்ததது. இதனால், அதிமுக அரசு மீது பாஜகவினர் கோபத்தில் உள்ளனர். அதிமுக அரசையும் பாஜகவினர் விமர்சித்துவருகின்றனர். வேல் யாத்திரைக்கு தடை விதிப்பது பற்றி அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’விலும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக என்ற இன்ஜின் இல்லையென்றால், அதிமுக என்ற ரெயில் நகராது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.


 “நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள் என்றால். அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையா? நடிகர்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். வேல் யாத்திரை நடத்திக்கொண்டிருக்கும் பாஜகவினரை தமிழக அரசு முழுமையாக நடைபயணம் செய்ய விடுவதில்லை. ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் பாஜக என்ற எஞ்சின் இல்லையென்றால், அதிமுக என்ற ரெயில் நகராது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பாஜக நிலையாக கால் ஊன்றும். தமிழகத்தில் பாஜகவை தவிர எல்லா கட்சிகளுமே கூட்டணி குறித்த குழப்பத்தில் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அது குறித்த கவலையே எங்களுக்கு இல்லை.” என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.