தேமுதிக அதிக தொகுதிகளை ஒதுக்கக்கோரி பிடிவாதம் செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக கேட்டு அடம்பிடித்து வருகிறது. மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பு உறுதியாக உள்ளது. இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தனர். 

இதனிடையே திமுக கூட்டணியில் தேமுதிக இணையலாம் என பேச்சுகள் பரவின. அதேவேளை குறைவான சீட் கொடுத்து அதிமுக அழைப்பதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வெளிப்படையாக விமர்சித்தார். இதனால், அதிமுகவுடன் தேமுதிக இணையுமா? அல்லது தனித்து களமிறங்குமா என்கிற குழப்பம் நிலவியது.

இந்நிலையில் சென்னை, திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூட்டணி குறித்து பேசினார். அப்போது, ‘’ தேமுதிகவுடனான கூட்டணிப்பேச்சு வார்த்தையில் இழுபறி இல்லை. மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் டிரம்பை கூட்டணிக்கு அழைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என விமர்சித்தார். அவரது பேச்சு தேமுதிக, அதிமுக கூட்டணியில் விரைவில் இணையலாம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.