வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் எனக்கூறி எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெளிவுபடுத்தியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை மத்திய பாஜக அரசுதான் இயக்கிவருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. ஆனால், மாநில அரசு என்ற முறையில், மாநில நலன் கருதி ஆட்சி ரீதியான நல்லுறவை மட்டுமே மத்திய அரசுடன் கடைபிடித்துவருவதாகவும் அதை கடந்து கட்சி ரீதியான உறவு கிடையாது என தமிழக ஆட்சியாளர்கள் விளக்கமளித்து வருகின்றனர். 

எனினும் அந்த விளக்கத்தையெல்லாம் ஏற்காத எதிர்க்கட்சிகள், தமிழக அரசின் மீதான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துத்தான் வருகின்றன. இந்நிலையில், அண்மைக்காலமாக பாஜகவுடன் திமுக இணக்கமான போக்கை கடைபிடிப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் கலந்துகொள்வதாக அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு ஸ்டாலின் சென்றது, அமித் ஷாவிற்கு அழைப்பு ஆகிய சம்பவங்கள், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அரசியல் கூட்டணி மாறுகிறதா என்ற கேள்விக்கும் அதுதொடர்பான விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணிதான் அமையும் கூறப்பட்டு வந்த நிலையில், அதுதொடர்பாக இரு கட்சிகளின் சார்பிலும் தெளிவாக தெரிவிக்கவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துவந்தனர். 

இப்படியே தெரிவித்து வந்த நிலையில், இன்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். கரூரில் பேசிய தம்பிதுரை, வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். 40 தொகுதிகளிலும் வென்று ஜெயலலிதாவின் பாதங்களில் சமர்ப்பிப்போம். அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என தம்பிதுரை தெரிவித்தார். 

அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், பாஜகவுடன் எல்லாம் கூட்டணி கிடையாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது தம்பிதுரையின் கருத்து.