’எங்கள் கோட்டைடா’ என்று அதீத கர்வத்துடன் அ.தி.மு.க.  குறிப்பிட்டு வந்த மண்டலம்தான் கொங்கு மண்டலம் என்றழைக்கப்படும் மேற்கு தமிழகம். ஆனால் இன்று அந்த கோட்டையே அக்கட்சியின் கரங்களை விட்டு விலகுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்க்ள். 

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஒரே காரணம், கொங்கு மண்டலம்தான். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்கள் அள்ளிக் கொடுத்தன சட்டமன்ற தொகுதிகளை. அதனால்தான் ‘கொங்கால் வென்றோம்’ என்று புளங்காகிதமடைந்தார் ஜெயலலிதா. 

அவரது மறைவுக்குப் பின், சசி சிறை சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு முதல்வர் பதவி வந்தது. அவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்தான். முதல்வரின் இரு கரங்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி எனும் இரண்டு முக்கிய அமைச்சர்களும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள்தான். ஆக தமிழகத்தை ஆள்வதே கொங்குதான் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. 
இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தல்  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வந்தபோது ‘நிச்சயம் கொங்குவால் வெல்வோம்.’ என்று பெரும் நம்பிக்கையுடன் இருந்தது அ.தி.மு.க. தலைமை. 

இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுவென நிகழ்ந்து வரும் நிலையில்....நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மட்டுமில்லாது, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே முன்னிலையில் நிற்கிறது. அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தது போலவே தென் மற்றும் வட தமிழகத்தில் அக்கட்சிக்கு பெரும் சரிவுதான். 

ஆனால், ஷாக்கிங்காக கொங்கு மண்டலத்திலும் அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்திருப்பது கண்கூடாக தெரிய துவங்கியுள்ளது. அக்கட்சி பெரிதும் எதிர்பார்த்த பொள்ளாச்சி தொகுதியிலேயே அ.தி.மு.க. சரிவை சந்திக்க துவங்கியிருப்பதுதான் பெரும் அதிர்ச்சி. அதேபோல் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் கோவை, நாமக்கல் ஆகிய தொகுதிகளிலேயே அ.தி.மு.க.வின் நிலவரமானது கலவரமாகி கிடக்கிறது. 

அதீத நம்பிக்கை ஆபத்தில் முடியுமென்பது இதுதானோ?....