தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி முடிவுக்கு வராததால், தமாகாவுடனான தொகுதி உடன்பாடும் தாமதமாகி வருகிறது.
 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, புத, புநீக, என்.ஆர்.கா. ஆகிய கட்சிகளுடன் அதிமுக தேர்தல் உடன்பாடு கண்டுள்ளது. ஆனால், தேமுதிகவுடனான தொகுதி உடன்பாடு இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. ‘இன்னும் இரண்டு நாள் பொறுங்கள்’ என்று நேற்றைய பிரஸ் மீட்டிலும் பிரேமலதா தெரிவித்தார். இதற்கிடையே தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை என்பதால் தமாகாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் தாமதமாகிவருகிறது.
தமாகா தரப்பில் அதிமுகவிடம் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை பதவியும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிக கூட்டணிக்கு வந்தால் 1 மக்களவைத் தொகுதியும், அவர்கள் வராவிட்டால் 2 தொகுதியும் தரப்படும் என்று கூறியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஆனால், தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அவர்களும் ஒரு மாநிலங்களவை பதவியுடன் கூடுதலாக மக்களவை தொகுதிகள் கேட்பதாகக் கூறப்படுகின்றன. தேமுதிகவுடன் இழுபறி நீடிப்பதால், அந்தக் கட்சியுடன் அதிமுகவால் உடன்பாடு காணமுடியவில்லை. தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்பட்டால்தான், தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது இறுதியாகும். இதனால், தமாகாவுடனும் தொகுதி உடன்பாடு தாமதமாகிவருகிறது.    
இதற்கிடையே அதிமுக நல்ல முடிவை அறிவிக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களது இயக்கப்பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கேற்ப அதிமுகவோடு கூட்டணி வைப்பது என முடிவு செய்து அந்த நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக அதிமுகவுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். தொகுதி ஒதுக்கீடு பற்றியும் தமாகா நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம். அதிமுக நல்ல முடிவை எடுக்கும் என்று  நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.