ADMK Team Leaders are fighting for AIMS Hospital
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு நிறுவுவது என்ற விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன், அதோடு மதுரையில் இருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று கூறி தமிழக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காவிட்டால் நெடுவாசலைப் போல மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று வெடித்திருக்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. தஞ்சையை தவிர்த்து எய்ம்ஸ் மருத்துவமனை வேறு எங்கும் செல்லக் கூடாது என்பதில் கண் கொத்திப் பாம்பாக கவனமாக இருக்கிறது சசிகலா அணி.
சுகாதாரத்துறை அமைச்சரான தனது மாவட்டமான புதுக்கோட்டையிலேயே எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் என்று டிபார்ட்மென்ட் மேட்டர்களின் டெக்கினிக்கலாக காய் நகர்த்தி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இப்படி சக்திவாய்ந்த அணிகளிடம் கால்பந்தாய் உதைவாங்கிக் கொண்டிருக்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை…

டெல்லியில் இருப்பது போலவே தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணியல் இறங்கிய மத்திய அரசு, கடந்த 2015 ஆம் ஆண்டு, இடத்தை தேர்வு செய்வதற்காக தஞ்சை, ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் ஆய்வு நடத்தியது. விமான முனையம், தேசிய நெடுஞ்சாலைகள், என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த தோப்பூர் என்ற இடத்தை மத்தியக் குழு தேர்வு செய்தது. ஆனால் சசிகலா மற்றும் விஜயபாஸ்கரின் தலையீட்டால் தோப்பூரில் மருத்துவமனையை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு திட்டம் கிடப்பில் உள்ளது.
இப்படி எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் நீருபூத்த நெருப்பாக இருக்க பந்தயக் களத்தில் இருந்து தஞ்சையை வெளியேற்றி இருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வாய்ப்பில்லை என்று கூறி அதிரச் செய்திருக்கிறார்.
தஞ்சை காலி, நமக்குத் தான் எய்ம்ஸ் என்று மதுரை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் கொங்கு அமைச்சரவையின் மாஸ்டர் பிளானே வேறு என்கின்றனர் உள்விவரமறிந்தவர்கள்.

சசிகலா என்னும் புலி வாலை பிடித்தாகி விட்டது. நீண்ட நேரம் அதனை கையில் வைத்திருக்கவும் முடியாது. சட்டென விட்டுவிடமும் இயலாது…தற்போது கிடைத்திருக்கும் எய்ம்ஸ் விவகாரமே சரியான தருணம். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஈரோடே சரியான இடம் என்று முதல் பரிந்துரை கொடுங்க. இதுக்கப்பிறகு அவங்க ஆட்சிக்கு இடையூறு செய்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்த செல்வாக்கு, கொங்கு மண்டலத்தில் நமக்க இருக்கும் வாய்ஸைக் கொண்டு சமாளிச்சுக்கலாம் என்று எடப்பாடியாருக்கு ஆலோசனை கூறப்பட்டதாம். அதனைத் தொடர்ந்தே பந்தயக் களத்தில் தஞ்சை இல்லை என்று அறவிப்பு செய்தாராம் முதல் அமைச்சர்.
மக்கள் துயர்துடைக்கும் மருத்துவமனை விவகாரத்தில் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலனுக்காக புட்பால் விளையாடி வருகின்றனர்.
